Sunday 3 June 2012

இசைஞானி இளையராஜா !!


இசைஞானி இளையராஜா !!

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான இசைஞானி இளையராஜா, தனது 30 வருட இசை வாழ்கையில் 950 மேலான படங்களுக்கு, 4500 மேலான பாடல்களை இயற்றியவர், இன்றும் இயற்றிகொண்டிருப்பவர்.

இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணயபுரத்தில் 1943 ஆம் வருடம் சூன் 2 இல் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஞானதேசிகன் (எ) ராசையா ஆகும். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். இவர் மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி.

இவர் சிறுவயதிலேயே ஆர்மோனியம் மற்றும் கிட்டார் வாசிப்பதில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்குபெற்றிருக்கிறார்.

இவர் 1969 ஆம் ஆண்டு தனது 29 ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் (CLASSICAL GUITAR - HIGHER) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவரின் சாதனைகள் உலகறியும். 1993 ஆம் ஆண்டு லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் இசையமைத்ததன் மூலம், ஆசிய கண்டத்திலேயே அங்கு இசைத்த முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை பெற்றார். அங்கு இசைத்தமுதல் " மேஸ்ட்ரோ " என்று அழைக்கப்படுகிறார்.

2003 இல், பிபிசி 155 நாடுகளில் எடுத்த சர்வதேச கணக்கெடுப்பில், உலகில் என்றும் சிறப்பான பத்து பாடல்கள் என்னும் பிரிவில், 1991 இல் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த தளபதி படத்தின் ராக்கம்மா கைய தட்டு பாடல் தேர்வானது.

2010 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment