Tuesday 5 June 2012

சூரிய சக்தி மின்சாரம் !!


சூரிய சக்தி மின்சாரம் !!

சூரிய சக்தி மின்சாரத்துக்கான முதலீடு என்பது அரசுக்கோ / தனிநபருக்கோ நீண்ட காலப் பயன்பாட்டுக்கான முதலீடாகவே இருக்கும். ஒரு முறை நாம் சோலார் பேனல் அமைத்து விட்டால், அது 25 ஆண்டுகளுக்குக் குறையாமல் மின்சாரம் தரும். பேட்டரியும் இன்வெர்ட்டரும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் வரை உழைக்கும். இதற்கு நாம் செலவழிக்கிற தொகையை இரண்டு வருடங்களில் மீட்டுவிடலாம். மேலும், மூலப்பொருள் தீர்ந்துபோகும் என்ற அச்சமே இல்லை. சோலார் பவர் என்றதும் மக்கள் தயங்குவதற்கு காரணம், அதனுடைய விலைதான். வீடுகளில் 1 கே.வி., திறனுள்ள "சோலார் பிளான்ட்’'கள் அமைக்க ரூ.2 லட்சம் செலவாகும். இதற்கு 81 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது.


சூரிய மின்சாரத்தை நாம் இரண்டு வகையாகப் பயன்படுத்தலாம். ஒன்று ஆன் கிரிட், இன்னொன்று ஆஃப் கிரிட். ஆஃப் கிரிட் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் டைரக்ட் கரன்ட்டாக பேட்டரியில் சேமிக்கப்பட்டு பின் இன்வெர்ட்டர் மூலம் அல்டர்நேட்டிவ் கரன்ட்டாக மாற்றப்பட்டு இரவும் கூட உபயோகத்துக்கு பயன்படுத்துவது. ஆன் கிரிட் என்பது நாம் தயாரிக்கிற மின்சாரத்தை கிரிட் மூலம் அரசுக்கோ இல்லை தனியாருக்கோ விற்பது ஆகும்.


புரட்சி செய்த குஜராத் அரசு

குஜராத்தில் உள்ள நர்மதா நதியின் கிளைக் கால்வாய்த் தண்ணீர் வீணாக ஆவியாவதை தடுத்து, அதே நேரம் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் புரட்சிகரமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்திருக்கிறார் நரேந்திர மோடி.


சூரிய மின்சாரம் பெறுவதற்கான போட்டோவோல்டிக் தகடுகளைப் பொருத்துவதற்கு நிறையவே இடம் தேவைப்படும். இதை தவிர்ப்பதற்காகத்தான், கால்வாயின் மீது தகடுகளை அமைத்திருக்கிறார்கள். நிலத்தில் வைக்கப்படும் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைவிட, 15 சதவிகிதம் கூடுதல் மின்சாரம் கால்வாயின் மீது வைக்கபடுவதால் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.


முதல் கட்டமாக 750 கி.மீ தூரத்துக்கு நீண்டு இருக்கும் சானந்த் - கடி நர்மதா கிளைக் கால்வாயின் மீது 'சோலார் பேனல்’ எனும் போட்டோவோல்டிக் தகடுகளை வைத்து, அதில் இருந்து வருடத்துக்கு சுமார் 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிப்பதுதான் திட்டம். இந்தத் திட்டத்துக்காக அந்த நதியில் இருந்து பிரியும் மொத்தக் கால்வாய்களையும் பயன்படுத்த யோசித்து வருகிறது குஜராத். அவற்றின் நீளம் 85,000 கி.மீ. இதில் 10 சதவிகிதத் தூரத்தை மட்டும் பயன்படுத்தினாலே, 2,200 மெகா வாட் ( கூடங்குளத்தின் மொத்த உற்பத்தி திறனே 4000 மெகா வாட் தான் ) மின்சாரம் தயாரிக்க முடியும்.


இதன் மூலம் 11,000 ஏக்கர் நிலப்பகுதி காப்பாற்றப்படும். மேலும் நீர் ஆவியாவது தடுக்கப்படுவதன் காரணமாக, வருடத்துக்கு சுமார் 2,000 கோடி லிட்டர் நீர் சேமிக்கப்படும்.


தமிழகத்தால் முடியுமா ?

தமிழகக் கால்வாய்களின் மீது சோலார் பேனல் வைத்து நம்மாலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இங்கே ஒரு வருடத்தில் சுமார் 300 நாட்கள் சூரிய வெளிச்சம் அபரிமிதமாகக் கிடைக்கிறது. இங்கே ஒரு சதுர கிலோ மீட்டரில் ஆண்டுக்கு சுமார் 35 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கலாம்.


உடுமலைப்பேட்டையில் இருந்து, மூணார் செல்லும் வழியில் அமைந்துள்ள சம்பக்காடு அருகே உள்ள தளிஞ்சி என்கிற மலைவாழ் மக்கள் கிராமத்தில் மின்சாரம் கிடைப்பது முழுக்க முழுக்க சோலார் சக்தியில்தான். சூரிய வெளிச்சம் கிடைக்காத மழை காலங்களில் ஆடு, மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து, மின்சாரம் பெறுகிறார்கள்.


தமிழகத்தில் காற்றாலை மூலம் 40 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம் என, வெளிநாட்டு கம்பெனிகள் தெரிவிக்கின்றன. இங்கு மின் உற்பத்தி செய்ய வெளிநாட்டினர் விரும்புகின்றனர்.


சிறப்பம்சங்கள்

சூரிய சக்தி மின்சாரத்தால் சுற்றுசூழளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, ரசாயன கழிவுகளும் இல்லை. மேலும் இந்திய அரசால் சில வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி மின்சாரத் திட்டத்தில் 2020-ல் 20,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 4,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து விட்டோம். ஆனால், 1960-களில் ஆரம்பிக்கப்பட்ட அணு மின் நிலையங்கள் இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் 4,000 மெகா வாட் மின்சார உற்பத்தியை நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே சூரிய சக்தியை நாடுவோம், பயன் பெறுவோம்.

3 comments:

  1. ஒரு சிறு வீட்டிற்கு சூரிய சக்திமூலம் மின்சாரம் பெற பட்ஜெட் எவ்வளவு ஆகும் என சொல்ல முடியுமா?....

    ReplyDelete
    Replies
    1. 1 KW திறனுள்ள சோலார் பிளான்ட்'கள் அமைக்க ரூ.2 லட்சம் செலவாகும். இதற்கு 81 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக வழங்குகிறது.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete